

அலுவலகத்தில் நூறு கூட்டம் வேலை. மன உளைச்சல். பல சமயங்களில் வீட்டில் இருந்து அவசரமாக ஏதாவது அழைப்பு வந்தால் கூட பதில் பேச முடியாத நிலை.
இந்த கொடுமையில் தினம் குறைந்தது ஒரு முப்பது அழைப்புகளாவது
வரும்.
இங்குள்ள அனைத்து வங்கிகளிலும் இருந்து, கிரெடிட் கார்டு வேண்டுமா, பர்சனல் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா என்று.
நாம் எவ்வளவுதான் பிஸி என்றாலும் சொல்வதை புரிந்து கொள்ளாமல், பேசிக்கொண்டே இருப்பார்கள்.
பேசத்துவங்கினால் நிறுத்த மாட்டார்கள்.
அலுவலகத்தில் பிஸி என்றால் உடனே மொபைல் நம்பரில் அழைக்க துவங்கி விடுவார்கள்.
எப்படித்தான் இவர்களால் நம் நம்பரை கண்டு பிடிக்க முடிகின்றது என்று நமக்கே தெரியாது.

ஒருமுறை ஒரு மீட்டிங்கில் சீரியஸ் ஆக இருக்கும்போது, சொல்லி வைத்தாற்போல் நான்கைந்து பேருக்கு தொடர்ந்து அழைப்புகள்.
வேறொன்றும் இல்லை. மேலே சொன்ன அழைப்புகள்தான்.
பெரும்பாலும் பெண்கள்தான் அழைப்பார்கள்.
நம்மூர் காய்கறி மார்க்கெட்டில் பெண்கள் 'கூவி' விற்பது நினைவில் வரும்.

முதலில் வரும்போது தேனொழுக பேசுவார்கள். வருடாந்தர கட்டணம் இல்லை, அப்படி, இப்படி என்று மொத்தமாக கவிழ்த்து விடுவார்கள்.
கார்டு கையில் கிடைத்த பின் இவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.
ஏதாவது சந்தேகம் என்று அழைத்தால், ஒரே மறுபடி, 'அது வேற செக்சன், டோல் ப்ரீ நம்பரில்
கூப்பிடுங்கள்'நம்மிடம் கேட்காமலேயே அது இது என்று (கிரெடிட் கவர், இன்சூரன்ஸ் கவர், டிராவலிங் கவர் இது போல் இன்னும் நிறைய) கட்டணங்களை ஏற்றி விடுவார்கள்.

குறிப்பிட்ட தேதியில் கட்ட தவறினால் அதற்கு ஒரு சார்ஜ்.
ஒவ்வொரு முறை பணமாக எடுக்கும்போது அதற்கு சார்ஜ்.
அடுத்த கட்டமாக, அழைப்புகள் துவங்கும். இதும் பெண்கள்.
'உங்கள் பணத்தை வேறு கிரெடிட் கார்டு இருந்தால் டிரான்ஸ்பர் செய்யலாம்.
'இன்ன இடத்தில், இதை வாங்கினால், இந்த டிஸ்கவுண்டு'
கொடுமையிலும் கொடுமையாக, நம்மிடம் கேட்காமலேயே 'நமது கிரெடிட் லிமிட்டை உயர்த்தி விட்டு, கூடவே ஒரு பாராட்டு கடிதமும்.
இதில் கொண்டாட்டம் என்னவென்றால், இரண்டு மாதமாக பணம் கட்டாத ஒருவருக்கு, கிரெடிட் லிமிட் உயர்த்தப்பட்டு விட்டது என்று வந்த ஒரு பாராட்டு கடிதம்.

எனது நிறுவனத்தில் பணிபுரியும் ஏராளமான அப்பாவிகள், தொழிலாளிகள், போர்மேன்கள், எஞ்சினியர்கள், மற்றும் பலர், கீழ் மட்டம் தொட்டு மேல் மட்டம் வரை அனைவருமே ஆசையில் விழுந்து விட்டார்கள்.
மூவாயிரம் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு, பன்னிரெண்டாயிரம் லிமிட். இந்திய மதிப்பில் ஏறக்குறைய ஒரு லட்சத்தி எழுபது ஆயிரம்..???
கையில் காசு இருந்தால் யாராவது சும்மா இருப்பார்களா?
ஷாப்பிங் போனால், ஊருக்கு போனால், ஏன், டெலிபோன் கார்ட் வாங்க கூட கிரெடிட் கார்டு உபயோகம்.
நல்லது சொன்னால் யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் தலையில் ஏறாது.
கூடவே நாம் ஏதோ வரும் நல்லதை தடுப்பது போல் ஒரு தோணல்.
இரண்டு மூன்று மாதம் போன பிறகுதான் நிஜம் சுடத்துவங்கியது.
வாங்கும் சம்பளம் மினிமம் பாலன்ஸ் கட்ட கூட போதாத நிலை வந்த போதுதான்
அனைவருக்கும் விழிப்பு வந்தது.

மொத்தத்தில் பெரும்பாலானோர் நிலை 'திரி சங்கு சொர்க்கம்'.
இது
போதாதென்று வங்கிகளில் இருந்து லோன்.
எந்த நம்பிக்கையில் லோன் கொடுக்கிறார்கள், வாங்குகிறார்கள் என்பது தெரியவில்லை.
நான்காயிரம் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு, ஒரு லட்சத்து முப்பதாயிரம் லோன். இந்திய மதிப்பு ஏறக்குறைய பதினெட்டு லட்சத்திற்கும் மேல்.
குறைந்தது ஏழு வருடங்கள் கட்ட வேண்டும்.
இன்று அனைவரும் முழி பிதுங்கி நிற்கிறார்கள்.
இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் இங்கு ஆள்குறைப்பை ஆரம்பித்து விட்டார்கள். எந்த நிமிடம்
என்ன நடக்கும் ...... யாருக்கும் தெரியாது.
வேலை கிடைப்பது இப்போது குதிரைக் கொம்பு.
கிடைத்தாலும், இப்போது கிடைக்கும் சம்பளம் கிடைக்கும் என்று நிச்சயம் இல்லை. கான்செல் செய்து ஊருக்கு போகலாம் என்றால் அதுவும் நடக்காது.
விமான நிலையத்தில் பிடித்து விடுவார்கள்.
இவை எல்லாம் முன்பே யோசித்து இருக்க வேண்டும்.
எங்களது நிறுவனத்தில், உரிமையாளர் நல்ல
மனிதர், பலருக்கும் கம்பெனியில் இருந்தே லோன் வழங்கியதால், பல பேர் தப்பினார்கள்.
ஆனால் இனியும் இந்த வலையில் சிக்கி தவிப்பவர்கள் ஏராளம்.
கிரெடிட் கார்டு வாங்குவதில் தப்பில்லை. முறையாக பயன்படுத்தினால், மிகவும் உபயோகமுள்ள ஒன்று. மாறாக சிக்கினால் சிக்கல்தான்.
இது ஒரு கத்தி போன்றது. காய்கறி வெட்டலாம், கேக் வெட்டலாம், மீன் வெட்டலாம், கவனத்துடன்..... இல்லையேல் கையை வெட்டி விடும்.
@@@@@@ இப்போது
கடந்த சில மாதங்களாக, இது போன்ற அழைப்புகள்
வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது மொத்தமாக நின்று விட்டது.
விசாரித்தபோது, பொருளாதாரப் புயல் காரணமாக, பெரும்பாலான வங்கிகளில் இந்த பிரிவு மொத்தமாக கலைக்கப்பட்டு விட்டது தெரிய வந்தது.@@@@@@