Monday 28 September 2009

நன்மைகள் என்றும் நன்மை பயக்கும்.......


நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட அனுபவம்.....

நான்கு வருடங்களுக்கு முன்பு.... வேலை செய்தது அபு தாபியில் ஒரு மிகப் பெரும் நிறுவனத்தில். மொத்தம் நாலாயிரம் ஊழியர்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட புராஜக்டுகள். ஒரு மாத விடுமுறைக்கு சென்றிருந்தேன்.

திரும்புவதற்கு நான்கு நாட்கள் உள்ள போது நண்பரிடமிருந்து திடீர் அழைப்பு. கேட்டதும் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. வேறு ஒன்றும் இல்லை. கம்பெனி லாக் அவுட். முதலாளி தலை மறைவாகி விட்டார்.

"
திரும்பி வராதே, மெதுவாக வந்தால் போதும். வந்த பிறகு வேறு ஏதாவது வேலை தேடலாம்". இது நண்பனின் அறிவுரை. கடவுள் புண்ணியத்தால், பாக்கி இருந்த செட்டில்மென்ட் எல்லாம் விடுமுறைக்கு வரும்போதே வாங்கியிருந்தேன்.

பாக்கட் காலி. புதிதாக கடன் வாங்கி கட்டிய வீட்டுக்கு
மாதம் முப்பதாயிரம் கட்ட வேண்டும். அதுவும் ஐந்து வருடம். மனதை திடப்படுத்திக்கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல் (மனைவிக்கு மட்டும் தெரியும்) சிரிக்க முயன்று கொண்டிருந்தேன்.

விசா இனியும் இரண்டு வருடம் பாக்கி இருந்ததால், எப்படியாவது, வேறு வேலை தேடிக்கண்டு பிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு பெரிய விஷயம் பாருங்கள். லீவு முடிந்து கிளம்ப தாமதமானபோது, எனக்கோ என் மனைவிக்கோ, ஒன்றும் இல்லை.

ஆனால், நண்பர்கள், உறவினர்கள் இவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. 'என்ன ஆச்சு, இன்னம் கிளம்பலையா, இல்ல வேற ஏதாவது பிரச்சனையா..' இப்படி ஏகப்பட்ட கேள்விக்கணைகள். சகிக்க முடியாமல் ஒரு வாரம் வீட்டிலேயே முடங்கிகிடந்தேன்.

எப்போதும் நல்ல அறிவுரை தரும் ஒரு நண்பரை (ஹுசைன் சார்) தொலைபேசியில் அழைத்தேன். 'தைரியமாக கிளம்பி வா, எல்லாவருக்கும் நல்ல வேலை கிடைத்துள்ளது, உனக்கு மட்டும் என்ன, இதை விட நல்ல வேலை கிடைக்கும்' . அவரது பேச்சு தன்னம்பிக்கை தர அடுத்த நாளே கிளம்பினேன்.

இரண்டு நாட்கள் முழு நேரமும் கம்ப்யூட்டர் முன் இருந்து கொண்டு பயோ டாட்டாவை நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பினேன்.

மொபைலில் இருநூறு திராம்ஸ் ரீசார்ஜ் செய்து கொண்டு, 'கல்ப் நியூஸ்'
பத்திரிக்கையின் 'வாண்டேட்' விளம்பரங்களை அழைக்கத் தொடங்கினேன்.

நாட்கள் மெதுவாக நகர்ந்தன. உதவிக்கு நல்ல நண்பர்கள் இருந்ததால், அன்றாட செலவுகள் ஒரு விதம் நடந்தன.

ஒன்று, பத்து, என்று இப்போது இருபத்தி ஐந்து நாட்களாகிவிட்டது.
பாக்கெட் கனம் குறைய தொடங்கியது. மனைவியை அழைத்தபோது, 'காசும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், பேசாமல் கிளம்பி வாருங்கள்' என்ற அழைப்பு.

நானூறு மெயில் அனுப்பியிருப்பேன். பதில் வந்தது வெறும் ஆறு மட்டும்.
அதில் மூன்று சம்பளம் குறைவு. பாக்கி மூன்றும் விசா பிரச்சனை.

சிறிது சிறிதாக நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. பேசாமல் திரும்பி விடுவோமா என்று நினைத்தேன். அங்கு போய் என்ன செய்வது? இந்திய ரூபாய் மதிப்பில் ஆறு இலக்க சம்பளம் எங்கு கிடைக்கும்?

ஒரு வியாழக்கிழமை. பாதி விடுமுறை நாள். மாலை ஆறு மணி அளவில் நொந்த மனதுடன் அபு தாபி பீச்சில் நடக்கத் தொடங்கினேன். எதுவரை நடந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

மணி பத்தாகி விட்டது. திரும்பி நடந்தேன். 'கோர்நிச்' பாகம் வந்தவுடன் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு புகை பிடித்தேன். வலையம், வலையமாக வந்த புகையை பார்த்த போது, வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானம் கண்ணில் பட்டது. நமக்கு ஊருக்கு திரும்பும் நேரம் வந்து விட்டது என்று நினைத்தேன்.

கடிகாரத்தை பார்த்தேன். மணி பன்னிரண்டு தாண்டி விட்டது. ரூமுக்கு சென்றாலும் தூக்கம் வராது. நடக்க ஆரம்பித்தேன். ரோட்டில் யாரும் இல்லை.
அவ்வப்போது ஏதாவது ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

ரோடை ஒட்டியிருந்த நடைபாதையில் நடக்க ஆரம்பித்தேன். சிக்னல் வந்து விட்டது. இரவானாலும் சாலை விதிகளை கடைப்பிடிப்பது இங்கு பதிவான ஒன்று என்பதால் பச்சை விளக்கு வரும் வரை காத்து நின்றேன்.

சிக்னல் மாறியது. காலை எடுத்து வைக்கும் முன்பே தூரத்தில் கவனித்தேன்.
ஒரு வண்டி, கருப்பு நிறம் போல் தெரிந்தது. ஆனால் அதன் வரவு அவ்வளவு சுகமாக இல்லை.

ரோடின் இரு புறமும் ஆடி ஆடி... ஓவர் ஸ்பீடில்... சில வினாடிகள் நகரும் முன்பே வண்டி எனக்கு அருகில் வந்து விட்டது. அதுவும் என்னை நோக்கி.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. 'கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப்போனால், அங்கே ஒரு கொடுமை கூத்தடுச்சாம்'. ஒருவேளை அதுதானோ இது. 'மரணம் கண் முன்பு கண்டால், கேட்கவா வேண்டும். ஒரே தாவாக தாவி, மணலுக்குள் குதித்து உருண்டு புரள ஆரம்பித்தேன்.

வந்த வண்டி, ரோடில் இருந்து, பிளாட்பாம், தாண்டி, மணலுக்குள் வந்து சடன் பிரேக் அடித்து நின்றது. வண்டிக்கும் எனக்கும் சரியாக, இல்லேன்னா தோராயமா பத்தடி தூரம். எழுந்து ஓடி விடுவோமா என்று நினைத்தேன். கஷ்ட காலத்திற்கு ஷூ காணவில்லை. குதித்த குதியில் எங்கோ தெறித்து விட்டது.

வண்டியின் கதவு திறந்தது. கருப்பு துணியால் உடல் முழுவதும் மறைத்த ஒரு பெண். வேகமாக கதவை திறந்து என்னருகே ஓடி வந்து அரபியில் கத்த ஆரம்பித்தார். 'ஷூ ஆதா.... ஷூ சர் ..... ப்ஹி அய முஸ்கில்....'

'
மாபி முஸ்கில், 'மாபி முஸ்கில்....

கூறிக்கொண்டே நான் எழுந்தேன். அந்தப்பெண்ணின் பதற்றம் கண்டபோது,
ஏதோ பிரச்சனை என்பது மட்டும் விளங்கியது.

காருக்குள் பார்த்தபோது, வயதான ஒரு முதியவர், மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தார். அரையும் குறையுமாக அந்த பெண்ணின் அவசரமான பேச்சில் இருந்து மேட்டர் புரிந்து விட்டது. பெரியவருக்கு ஹார்ட் அட்டாக். மருத்துவமனைக்கு போக வேண்டும். பெண்ணிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை. அதனால்தான் இவ்வளவு பிரச்சனை.

அந்தப்பெண்ணை பின்னால் இருக்கச்சொல்லி விட்டு, வண்டியை கிளப்பினேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் மருத்துவமனையில். பெரியவரை தாங்கி பிடித்து உருள் வண்டியில் ஏற்றி, அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு செல்வது வரை கூடவே இருந்து உதவினேன்.

இனி ரூமுக்கு போவதை விட இங்கேயே இருக்கலாம் என்று நினைத்து, கூடவே இருந்தேன். அந்த பெண்ணை, அருகில் இருக்க சொல்லி விட்டு, மருந்து வாங்குவது, அது, இது என்று எல்லா உதவியும் செய்தேன்.

மணி அதிகாலை ஐந்தானது. 'இனி நான் கிளம்புகிறேன், என்ன தேவை என்றாலும் தயங்காமல் கூப்பிடுங்கள்' என்று சொல்லி மொபைல் நம்பரை கொடுத்தேன். ரூமுக்கு வந்தவுடன் தூக்கம் கண்ணை சொக்க அயர்ந்து விட்டேன்.

மொபைல் சத்தம் கேட்டு கண் துறந்தேன். மணி மலை நான்கு. ஏதோ புதிய எண். யாராக இருக்கும்.... நினைத்துக்கொண்டே 'ஹலோ' என்றேன்.
பரிச்சயமில்லாத குரல்.

அதே பெண்தான். குசலம் விசாரித்தவர், அவரது அப்பா இப்போது சுகமாக இருப்பதாகவும் என்னைக்காண விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மணி ஐந்து, குளித்துவிட்டு கிளம்பினேன். லிப்ட்டில் இருந்து இறங்கி வெளியே வந்தேன். ஒரு டாக்ஸி கூப்பிடலாம் என்று நினைத்தபோது மறுபடியும் செல் சிணுங்கியது. அதே பெண். சலாம் ஸ்ட்ரீட் சிக்னல் அருகில், லு லு சென்டரின் பின்புறம் காரில் நிற்பதாகவும், காத்திருப்பதாகவும் சொன்னார்.

மருத்துவமனை வந்த போது, அங்கு திருவிழா கூட்டம். பெரியவரது உறவினர், உற்றார் அனைவரும் இருந்தினர். என்னை கண்டதும் பெரியவர் எழுந்து வந்து என் கைகளைப் பிடித்து கொண்டு புன்னகை செய்தார்.

எல்லாவரிடமும் என் அறிமுகம். ஏறக்குறைய நான் ஒரு ஹீரோ ஆகியிருந்தேன். பெரியவருக்கு அறுபது, அறுபத்தஞ்சு வயதிருக்கும்.

ஆங்கிலம் சரளமாகப் பேசினார்.

அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.என்னை பற்றி விசாரித்த போது

உள்ள விசயங்களை எல்லாம் மறைக்காமல் கூறினேன். 'அல்லாஹ் அக்பர்' எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்றவர், நான் விடைபெறும் போது, என் உள்ளங்கையில் ஒரு கவரை வைத்தார்.

என்ன என்று பிரித்து பார்த்த போது நூறு திராம்ஸ் நோட்டுகளின் ஒரு சிறிய கட்டு.

எனக்கு சங்கடகமாகி விட்டது. நெளிந்து கொண்டே பெரியவரிடம் 'மிக்க நன்றி, உங்களுக்கு உதவ தெய்வம் எனக்கு தந்த ஒரு வாய்ப்பாகவே இதை நான் கருதுகின்றேன். தயவு செய்து என்னை தவறாக நினைக்காதீர்கள்' என்றேன்.

அவரது முகத்தில் ஒரு மிகச்சிறிய மாற்றம். வெளியில் இறங்கும்போது மீண்டும் என்னை அழைத்தவர், என் மொபைல் நம்பரை கேட்டு தனது மொபைலில் பதிந்து கொண்டார்.

பர்சில் இருந்து அவரது விசிடிங் கார்டு நீட்டினார். 'எந்த உதவி என்றாலும் தயங்காமல் தொடர்பு கொள்ளவும்' என்றார்.



வாங்கி என் பர்சில் சொருகிக்கொண்டேன்.


வெளியில் இறங்கி நடந்தேன். மனதுக்குள் குட்டிச்சாத்தான் மெல்ல வெளியே எட்டிப்பார்த்தது. பணத்தை வாங்கியிருக்கலாம் அல்லவா'. சம்மட்டி கொண்டு குட்டிச்சாத்தானை அடித்து அமர்த்தினேன்.

பக்கத்தில் இருந்த ஹோட்டலில் ஒரு டீயும் சாண்ட்விச்சும் சாப்பிட்டேன். மணி இரவு எட்டு. ரூமுக்கு போக மனமில்லை. ரோடோரமாக நின்று கொண்டு சுகமாக தம்மடிக்க ஆரம்பித்தேன். மறுபடியும் ரிங் டோன். இப்போது மனைவி. மறுபடியும், விசாரணை, ஆறுதல், தன்னம்பிக்கை........

மணி ஒன்பது. ரூமுக்கு வந்தவுடன் கட்டிலில் தொபுக்கென விழுந்தேன். உறக்கம் வரவில்லை. எதிர்காலம் ஒரு பிசாசு போலே கண்முன் வந்து பயமுறுத்தியது. டிவியை உணர்த்தினேன்.

ஏசியாநெட்டில் மோகன்லாலின் காமெடி மலையாளப்படம் ஓடிக்கொண்டிருந்தது, பார்ப்பதற்கு மனமில்லை.

கண்களை மூடிக்கொண்டு நாமம் ஜெபிக்க ஆரம்பித்தேன்.
'
ஓம் க்ரீம் க்ரோம் கார்த்தவீர் யார்ஜூ நாய நமக, கார்த்தவீர் யார்ஜூ நமோ பாகி கதம் நஷ்டம் சலப்யதே........ ' உறங்கி விட்டேன்.

சனிக்கிழமை, காலை மணி ஒன்பது. குளித்து விட்டு பத்திரிக்கையில் 'வேலை வாய்ப்பு' பதிவு போல் மேய்ந்து கொண்டிருந்தேன்.

'
ரிங் டோன்' ஹலோ என்றேன். கிளி போல் பெண் குரல்.
ஆர் யு மிஸ்டர் .............
எஸ்... எம் .........

'வழக்கம் போல் ஏதோ ஒரு நேர்முகத்திற்கான அழைப்பு.

பதினொன்று மணிக்கு....
சென்றேன்...

அபு தாபியில் இருந்து நாற்பது கிலோ மீட்டர் தூரம். 'முசபா' ஏரியா.
டாக்சியில் போனேன்.

தேர்வு எடுத்தவர் ஒரு லோக்கல் அரபி. ஹிந்தி சினிமா நடிகர் ராஜ் கபூர் போல் நல்ல கலை.

என் பயோ டாட்டாவை பார்த்தார். கேள்வி ஒன்றும் கேட்கவில்லை.
எப்போது வேலைக்கு சேர முடியும் என்று கேட்டார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு வேலை நம்மை கேலி செய்கின்றார்களோ என்று நினைத்து, 'வாட் அபௌட் மை சாலரி' என்றேன்.

ஹவ் மச் யு ஆர் எக்ஸ்பெக்டிங்' என்றார்.

வந்தால் மீன், போனால் புழு ...... தைரியமாக ' டென் தௌசண்ட் திராம்ஸ்' என்றேன்.

என் முகத்தை உற்றுப்பார்த்தவர் ' நாளை முதல் வேலைக்கு வாருங்கள், ஒரு வாரம் ஒப்செர்வேசன்'. பிறகு உங்களை நிரூபித்தால், ஒருவேளை நீங்கள் எதிர்பாராத சம்பளம் கிடைக்கும் என்றார்.

ஒரு வாரம் ஒரு நொடி போல் ஓடிப்போனது. இன்று முதல் வேலை நிரந்தரம்.
மனம் பூமிக்கும் வானுக்கும் துள்ளிக்குதித்தது.
வீட்டில் எல்லாவருக்கும் சந்தோசம்.

எட்டாவது நாள் மீண்டும் அந்தப்பெண் அழைத்தார். சந்தோசத்தை பங்கு வைத்தேன். அவரும் சந்தோசப்பட்டார்.
பெரியவரை பற்றிக்கேட்டேன். நலமாய் இருக்கிறார், உங்களை மிகவும் விசாரித்ததாக சொல்ல சொன்னார் என்றார்.

ஒன்பதாவது நாள். அலுவலகதத்தில் .....' சார் உங்களை எம் டி அழைக்கிறார்' குயில் போல் செக்ரடரியின் குரல்.

'மே கம் இன் சார்' கதவை முட்டி விட்டு நுழைந்தேன்.

பதிவு போல் வழக்கமான குசல விசாரிப்பு. இறங்கும் போது மீண்டும் அழைத்தவர் ' உங்களுக்கு 'ஷேக் அப்துல் அல் ஹஷிமியை எப்படி தெரியும்' என்றார்.

ஒரு நொடி முழித்தேன். ' எனக்கு அப்படி யாரையும் தெரியாது' மறுபடியும் யோசித்து விட்டு 'நோ சார்' என்றேன்.

நம்மிடம் எதற்காக இவர் இப்படி கேட்கிறார்.... ஒன்றும் புரியவில்லை....
அன்று இரவு நண்பனின் போன் நம்பர் தேடுவதற்காக பர்சை குடைந்து கொண்டிருந்தேன். ஒன்று கீழே விழுந்தது. குனிந்து எடுத்தேன்.

ஆஹா... இது அன்று பெரியவர் தந்த விசிடிங் கார்டு. அன்று வாங்கியவன் அப்படியே பர்சில் வைத்தது. மறந்தே விட்டேன். இதில் அவரது நம்பர் இருக்கும். அழைத்து வேலை கிடைத்த சந்தோஷமான விஷயத்தை சொல்லலாம் என்று..... பெயரை பார்த்தேன்...... 'ஷேக் அப்துல் அல் ஹஷிமி'.....




LIFE IS A PROCESS OF ADJUSTMENT

SUCCESS IS NOT A PERMANENT & FAILURE IS NOT FINAL, SO NEVER STOP WORKING AFTER SUCCESS & NEVER STOP TRYING AFTER FAILURE................